வெளிநாடுகளை சேர்ந்த பல லட்சம் பேர் அமெரிக்காவில் உள்ள பல்வேறு ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றன. இதில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவில் நிரந்தரமாக பணிபுரிய வேண்டும் என்றால் அந்நாட்டின் நிரந்தர குடியுரிமையை பெற்றிருக்க வேண்டும். அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கான அடையாள அட்டை "கிரீன் கார்டு" ஆகும். அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணிபுரியும் வெளிநாடுகளை சேர்ந்த ஐ.டி ஊழியர்களுக்கு, ஒவ்வொரு நாட்டிற்கும் 7% சதவீதம் என்ற அடிப்படையில் "கிரீன் கார்டு" வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உச்சவரம்பை நீக்கி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
HR1044 என்றழைக்கப்படும் இந்த மசோதா, அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த அவையில் மொத்தம் உள்ள 435 உறுப்பினர்களில் 365 உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து செனட் அவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு மசோதா நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ள, இந்த மசோதாவிற்கு இந்திய ஐ.டி ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதே போல் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையால் இந்திய ஐ.டி ஊழியர்கள் அதிகளவில் பயனடைவர்.