கரோனாவின் தாக்கத்தின் விளைவாக உலகம் முழுவதும் அடுத்த ஆறு மாதத்தில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கக் கூடும் என ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக வழக்கமான பொது சுகாதார சேவைகள் அடியோடு முடக்கியுள்ளன. குறிப்பாக குழந்தை பிறப்பு மற்றும் பாதுகாப்பு, நோய்த் தடுப்பூசி திட்டங்கள் எனக் குழந்தைகளுக்கான பல அடிப்படை சுகாதார சேவைகள் முடங்கியுள்ளது. அதேபோல பல நாடுகளில் உணவு தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சத்தான உணவு கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் நோய்வாய்ப்படும் நிலையும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இதனை அடிப்படையாகக் கொண்டு யுனிசெப் வெளியிட்டுள்ள தகவலில், அடுத்த ஆறு மாதங்களில், ஐந்து வயதிற்குட்பட்ட12 லட்சம் குழந்தைகள் வழக்கத்தை விட கூடுதலாக உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், பிரேசில், பாகிஸ்தான், நைஜீரியா, மாலி மற்றும் சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் அதிக குழந்தைகள் மரணம் நிகழும் எனவும் யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.