பைசர் தடுப்பூசியைப் பொதுமக்களுக்கு விநியோகிக்க அமெரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 90 சதவீதத்திற்கு மேலாகப் பலன் அளிப்பதாக அண்மையில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தடுப்பு மருந்தானது இந்த மாதம் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டது. அதன்படி, பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு டிசம்பர் 2- ஆம் தேதி பிரிட்டனும், டிசம்பர் 4- ஆம் தேதி பஹ்ரைனும் அனுமதி வழங்கின. அதேபோல கனடாவும் இந்த தடுப்பு மருந்தை தங்களது நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்த பட்டியலில் நான்காவது நாடாக அமெரிக்காவும் இணைந்துள்ளது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்குக் கொண்டுவர ஆதரவாக நிபுணர் குழு உறுப்பினர்களில் 17 பேரும், எதிராக 4 பேரும் வாக்களித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறித்துப் பேசியுள்ள ஜோ பைடன், "பைசர் கரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் இருண்ட காலத்தில் ஒரு பிரகாசமான ஒளியைப் பாய்ச்சுவது போல அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பாதுகாப்பை மதிப்பீடு செய்த விஞ்ஞானிகள் மற்றும் பொதுச் சுகாதார நிபுணர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.