Skip to main content

பாகிஸ்தானுக்கு எதிராக வெடித்த போராட்டம் - மக்களை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்திய தலிபான்கள்!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

afghanistan

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் தங்களது ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புதிய ஆட்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே, பாஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இந்தநிலையில், தலிபான்கள் பாஞ்ஷிரைக் கைப்பற்றுவதற்குப் பாகிஸ்தான் உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் தலிபான்களுக்கும், தனி குழுவாக இருந்து பின்னர் தலிபான்களுடன் இணைந்த ஹக்கானி நெட்வொர்க்கிற்கும் ஆப்கனில் அமையவுள்ள ஆட்சியில் முக்கிய பொறுப்புகள் குறித்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மோதலைத் தூண்டி தலிபான்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள பாகிஸ்தான் முயலுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்காகவே பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் தற்போது ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (07.09.2021) 70க்கும் மேற்பட்டவர்கள் காபூல் வீதியில் பாகிஸ்தானுக்கு எதிராக பேரணி நடத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

 

பேரணியில் கலந்துகொண்டவர்கள், ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதைக் கண்டித்து, 'பாகிஸ்தானுக்கு மரணம், ஐ.எஸ்.ஐ.க்கு மரணம்’ என கோஷங்களை எழுப்பியபடி, ஐ.எஸ்.ஐ. தலைவரின் ஹோட்டலை நோக்கிச் சென்றுள்ளனர். இதனையடுத்து தலிபான்கள், பேரணியில் ஈடுபட்ட மக்களைக் கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக ஏ.எஃப்.பி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்