ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் போர் நிறைவுபெற்றுள்ளதாக அறிவித்துள்ளதோடு, அங்கு தங்களது ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் தலிபான் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதர், காபூலுக்கு விரைந்துள்ளார்.
காபூலுக்கு விரைந்துள்ள அவர், ஆட்சி அமைப்பது தொடர்பாக மற்ற தலிபான் தலைவர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (17.08.2021) ஆப்கான் வந்த அப்துல் கனி பராதர், காந்தகரில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லா அப்துல் கனி பராதர், தலிபான் இயக்கத்தை நிறுவியவர்களுள் ஒருவர். தலிபான் நிறுவனர் முல்லா உமரின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக முல்லா அப்துல் கனி பராதர் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது தலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவராக உள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் ஒப்பந்தத்தில் தலிபான்கள் கையெழுத்திட்டதை இவர் மேற்பார்வை செய்தது குறிப்பிடத்தக்கது.