சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி, காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் நடைபெற்ற இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கியது. இதையடுத்து, சுவாதி கொலை வழக்கு தமிழக அரசியல் களத்திலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் ராம்குமார்தான் சுவாதியைக் கொலை செய்தார் எனத் தெரியவந்தது. இதையடுத்து, ராம்குமாரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். போலீசார் கைது செய்யச் சென்றபோது, ராம்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்குமார், பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சுவாதி கொலையில் ஆரம்பம் முதலே பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான், கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி, சிறையில் மின்சார வயரைக் கடித்து, ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்பொழுது வரை மர்மம் நீடிக்கும் இந்த சம்பவத்தில் சுவாதியை இழந்த பெற்றோர் தரப்பில் மூன்று கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே மூன்று கோடி ரூபாய் இழப்பீட்டை நீதிமன்றம் பெற்றுத்தர வேண்டும் என சுவாதியின் தாய் ரெங்கநாயகி தெரிவித்திருந்தார். இந்த வழக்கில், ரயில்வே பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது. இது திட்டமிட்ட கொலை என ரயில்வே நிர்வாகம் பதிலளித்தது. இந்நிலையில் இழப்பீடு கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் சுவாதி பெற்றோரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.