20 நாட்களைக் கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள் முடிவுறாத நிலையில், இந்த போரை உலக நாடுகள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். இப்போரின் காரணமாக மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல தொழில் நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி வருகின்றன.
இந்நிலையில், போர் நிலைமை குறித்து கனடாவின் நாடாளுமன்றத்தில் வீடியோ வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யாவின் தாக்குதலால் இதுவரை உக்ரைனில் 97 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், " ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து 97 உக்ரேனிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனில் உள்ள நினைவு வளாகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் அனைத்தையும் ரஷ்யா அழித்துவிட்டது. நாங்கள் பெரிதாக எதையும் கேட்கவில்லை. எங்களுக்கான நியாயத்தைக் கேட்கிறோம். உலக நாடுகளின் உண்மையான ஆதரவை நாங்கள் கேட்கிறோம். எங்களைத் தற்காத்துக் கொள்ளவும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், இப்போரில் வெற்றிபெறவும் உலக நாடுகளின் ஆதரவைக் கேட்கிறோம். இதுவரை உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு நன்றி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது போரை முடிவுக்குக் கொண்டு வராது. ரஷ்யாவைத் தடுக்க, உக்ரைனைப் பாதுகாக்க நாம் அனைவரும் இதனை விட இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்." எனத் தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியனிலும் நேட்டோ படையிலும் உக்ரைன் இணைந்துவிடலாம் என்ற அச்சமே ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்ட சூழலில், இவ்விரண்டிலுமே உக்ரைன் தோல்வியடைந்துள்ளதால் இதனை முன்வைத்து உலக நாடுகள் ரஷ்யாவைப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவைக்க வேண்டும் எனக் கருத்துக்கள் எழுந்து வருகின்றன.