ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்திய அரசின் இந்த முடிவிற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு உதவி செய்ய கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது பாகிஸ்தான். ஆனால் பெரும்பாலான உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவுடனான வர்த்தக உறவை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், மேலும் ரயில் மற்றும் பேருந்து சேவை ஆகியவற்றையும் நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பியாது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து கூறாமல் இருந்த ரஷ்யா இப்போது தனது நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " உண்மையான தகவல்களை ஆய்வு செய்ததில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை இந்திய அரசு ரத்து செய்ததும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும், அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பின் அதை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைதியாகப் பேசித் தீர்க்க வேண்டும். இந்த விவகாரத்தை காரணமாக வைத்து, எந்தவிதமான மோசமான சூழலும் தங்கள் பிராந்தியத்தில் உருவாவதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அனுமதிக்கக் கூடாது " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ரஷ்யாவும் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து கூறியிருப்பது பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியானதாகவே பார்க்கப்படுகிறது.