ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கை தமிழர் குடும்பத்தை நாடுகடத்தும் முடிவுக்கு எதிராக ஆஸ்திரேலியா மக்கள் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இலங்கை உள்நாட்டு போர் காலகட்டங்களில் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகளான நடேசலிங்கம், பிரியா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவிலேயே திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு கோபிகா (4 வயது), தருணிகா (2) என 2 மகள்களும் பிறந்தனர்.
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை கடுமையாகியுள்ள ஆஸ்திரேலியா இந்த தம்பதிகளை நாடு கடத்த உத்தரவிட்டது. இவர்கள் நாடு கடத்தப்படுவதற்காக கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டனர். இதற்கு ஆஸ்திரேலியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் இவர்கள் நாடுகடத்தப்பட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டது. பாதி வழியில் விமானம் சென்றுகொண்டிருந்த போது ஆஸ்திரேலிய நீதிபதி, இவர்களது நாடு கடத்தும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதனால் பாதி வழியில் விமானம் மீண்டும் திருப்பப்பட்டு ஆஸ்திரேலியா கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், இவர்களை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அவர்களை நாடு கடத்தும் முடிவை விடுத்து, அவர்கள் வாழும் சூழலை உருவாக்கி தரவேண்டும் என ஆஸ்திரேலியா அரசை அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.