கரோனா பாதிப்பு காரணமாக குழந்தைகளுக்குப் போடப்பட வேண்டிய பல அத்தியாவசியத் தடுப்பூசிகள் போடப்படாமல் இருப்பதால் எதிர்காலத்தில் இதன் காரணமாக எட்டுக் கோடி குழந்தைகள் வரை பாதிக்கப்படலாம் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதன் காரணமாக பொது மருத்துவம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளுக்குத் தட்டம்மை, போலியோ போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் போடப்படாமலேயே உள்ளன. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தத் தடுப்பூசிகள் போடப்படாததால் 68 நாடுகளைச் சேர்ந்த 8 கோடி குழந்தைகள் எதிர்காலத்தில் எபோலா, தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் போலியோ போன்ற நோய்களால் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது.