
சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஒர் ஆண் உள்பட 235 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் செவிலியர்களுக்கு ஷிப்ட் முறைப்படி இரவு பகல் என பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 40 செவிலியர்களுக்கு உயர் அதிகாரிகள் சிபாரிசின் அடிப்படையில் இரவு பணி வழங்காமல் பகல் பணி மட்டும் வழங்குவதாகவும் மற்ற அனைவருக்கும் இரவு பணி வழங்குவதாகவும் செவிலியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இரவு பணிகள் அதிகம் வருவதால் பகல் நேர பணிகள் மிகவும் குறைவாக வருகிறது. இதனால் மாதத்திற்கு 15 நாட்களுக்கு மேலாக இரவு பணி பார்ப்பதால் தூக்கம் இல்லாமல் பல்வேறு நோய்கள் ஏற்பட்டுறது. தொடர்ந்து இரவு பணி பார்ப்பதால் குடும்பத்தில் உள்ள குழந்தைகளை கூட பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது என கவலை தெரிவித்துள்ள செவிலியர்கள், அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் இரவு பணிகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அண்ணாமலை பல்கலைக்கழக தலைவர் ஜான், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைவர் பாண்டியன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.