
சென்னையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று நடைபெற இருக்கிறது. எமது கட்சியின் சார்பில் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனைச் செல்வன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி ஆகியோர் இதில் பங்கேற்கிறார்கள்.
நீட் தொடர்பாக நடைபெற உள்ள இந்த இந்த கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சில முடிவுகளை எடுக்க முதல்வர் எடுப்பார் என நம்புகிறோம். விசிக சார்பில் சில முன்மொழிவுகளை முதல்வரின் பார்வைக்கு வைத்திருக்கிறோம். மாலை நடைபெற உள்ள கூட்டத்தில் அதை வலியுறுத்த இருக்கிறோம். நீட் தொடர்பாக பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளக்கூடிய மாநில உறவுகளை எல்லாம் அழைத்து தொகுதி மறு சீரமைப்பிற்கு எப்படி ஒரு கூட்டம் நடைபெற்றதோ அதேபோல் அகில இந்திய அளவில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி கல்வி தொடர்பான அதிகாரத்தை பொதுப்பட்டியலில் இருந்து மாற்றி மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்கின்ற கருத்து உருவாக்கத்தை வலியுறுத்த இருக்கிறோம்'' என்றார்.
அப்போது, 'நேற்று செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு அடிமையாக இருக்கிறார்கள்' என விமர்சனத்தை முன் வைத்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், 'திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியே வரும் என்று இலவு காத்த கிளியே போல காத்திருந்தார்கள். அவ்வாறு அது நிகழவில்லை. நிகழாததின் விளைவாக விரக்தியின் விளைவாக இப்படிப் பேசுகிறார்கள்'' என்றார்.