ஐந்தாண்டுகளில் பாகிஸ்தானில் குடியுரிமை பெற்ற 298 இந்தியர்கள்!
ஐந்தாண்டுகளில் பாகிஸ்தானில் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 298 என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஷேக் ராகீல் அஸ்கர், பாகிஸ்தானின் குடியுரிமை விவகாரங்கள் குறித்த கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், 2012-ஆம் ஆண்டு முதல் 2017 ஏப்ரல் 14 வரை இந்தியர்கள் 298 பேருக்கு குடியிரிமை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தது.
இந்த விரிவான தகவலில் 2012-ஆம் ஆண்டு 48 பேருக்கும், 2013-ஆம் ஆண்டு 75 பேருக்கும், 2014-ஆம் ஆண்டு 76 பேருக்கும் குடியுரிமை வழங்கியிருந்தது. இந்த எண்ணிக்கை 2015-ல் 15 ஆக குறைந்தது. 2016-ல் 69 பேருக்கும், 2017 ஏப்ரல் மாதம் வரை 15 இந்தியர்களுக்கு பாகிஸ்தானில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மாதிரியான நாடுகளில் குடியுரிமை பெறுவது என்பது சிரமமான காரியம். இருந்தபோதிலும், இந்நாட்டில் குடியுரிமை பெறாமல் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பர்மா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக தங்கி வருகின்றனர்.
கடந்த வருடம் இந்தியப் பெண்மணி ஒருவர் பாகிஸ்தானில் வாழ்வதற்கான குடியுரிமையை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வழங்கியது. பாகிஸ்தானைச் சேர்ந்த அவரது கணவரின் இறப்பிற்குப் பின்னர், தனது மகன்களுடன் வாழ்வதற்காக பாகிஸ்தானில் குடியுரிமை கோரியிருந்தார். அவர் இதற்காக விண்ணப்பித்திருந்தது 2008-ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்