Skip to main content

"2024 தேர்தல் முடிவு மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமையும்" - ராகுல் காந்தி

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

2024 election result will surprise people rahul gandhi

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்கள், பல்துறை அறிஞர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று வாசிங்டன்னில் நேஷனல் பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசுகையில், "பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் தடுக்க முடியாத சக்திகள் என்று மக்கள் நம்பும் போக்கு உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. இந்த இடத்தில் எனது சிறிய கணிப்பை சொல்லுகிறேன். நாங்கள் பாஜவுடன் நேரடியாக போட்டியிடும் அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவி அதன் மூலம் அழிவை சந்திப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அடுத்து வரக்கூடிய தேர்தல்கள் பாஜகவினருக்கு கடினமானதாக இருக்கும். கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றதைப் போலவே அடுத்தடுத்த மாநிலங்களிலும் வெல்வோம். அதற்கான அடிப்படைத் தேவைகளை நாங்கள் கொண்டுள்ளோம். தயவுசெய்து ஒன்றை உணருங்கள், இந்தியாவில் 60 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை.

 

மக்கள் ஆதரவு மோடிக்கு இல்லை. பாஜகவிடம் தம்பட்டம் அடிக்கும் கருவிகள் நிறைய உள்ளன. அதனால் ஒரு விஷயத்தை மிகைப்படுத்துவதில் பாஜகவினர் வல்லவர்கள். எனவே, காங்கிரசால் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான கூட்டணி தேவை. அதற்கு தெளிவான செயல்திட்டமும் தேவை. இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேசி வருகிறது. கூட்டணி விஷயத்தில் தேவைக்கேற்ப விட்டுக் கொடுத்து பெற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.  எனவே 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு நிச்சயம் மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமையும். தற்போது இந்தியாவில் சுதந்திரமான அமைப்புகளை கைப்பற்றுவது மற்றும் கட்டுப்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக பத்திரிகைகள் உறுதியாக கைப்பற்றப்பட்டுள்ளன. மோடியை தோற்கடிக்க இயலாது என்று ஊடகங்கள் சொல்லி வருகின்றன. அதில் பல மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

 

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விஷயங்கள் மக்களிடம் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்ய இந்தியாவில் ஏற்கனவே மிகவும் வலுவான அமைப்பு உள்ளது. ஆனால் அந்த அமைப்பு தற்போது பலவீனமடைந்து உள்ளது. எனவே அழுத்தம் தரப்படாத மற்றும் கட்டுப்படுத்தப்படாத தன்னாட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டும். அது தான் இந்தியாவில் வழக்கமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விரைவில் அவற்றை மீட்டெடுக்க முடியும். எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யும் அளவுக்கு ஜனநாயகம் தாக்கப்படும் என்று நான் நினைத்து பார்த்ததில்லை. இது ஜனநாயகத்தை தாக்கும் முறை. ஆனால் ஒரு வகையில் எனக்கு நல்லது தான். ஏனென்றால் இதன்மூலம் நான் என்ன செய்யவேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எனக்கு அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள்.

 

என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நன்றி. இந்த அமெரிக்க பயணத்தில், இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பதற்காக பலர் போராடத்  தயாராக இருப்பதை பார்க்க முடிகிறது" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்