2018-க்குள் 1 லட்சம் இந்திய சுற்றுலாப்பயணிகளை எதிர்பார்க்கும் இஸ்ரேல்!
வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் சுற்றுலாப்பயணிகளை எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்களில் இஸ்ரேலும் அடக்கம். இங்கு புனிதப்பயணங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள் மற்றும் தேனிலவு கொண்டாட்டங்கள் போன்றவற்றிற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நாட்டிற்கு இந்தியாவிலிருந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 9 மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து 35,000 இந்தியர்கள் இஸ்ரேலுக்கு சுற்றுலாப்பயணிகளாக சென்றுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 55,000-ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு நேரடியாக நான்கு விமானங்கள் வருகின்றன. இந்த விமானங்களின் எண்ணிக்கை கூடிய விரைவில் அதிகரிக்கப்படும். இதன் மூலம் 2018 இறுதிக்குள் 1 லட்சம் இந்திய சுற்றுலாப்பயணிகளை இஸ்ரேலுக்கு ஈர்க்க முடியும். மேலும், இதில் முக்கிய பங்காக இஸ்ரேல் சுற்றுலாத்தளங்கள் குறித்த விளம்பரங்கள் இந்தியாவில் வெளியிடப்படும். இதுகுறித்து இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதற்காக இஸ்ரேல் அரசு ஆண்டொன்றுக்கு 60லட்சம் டாலர் வரை செலவு செய்யவும் முடிவு செய்துள்ளது என இஸ்ரேல் நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ச.ப.மதிவாணன்