ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் நேரத்தில் மரணிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முதியவர் இன்று கருணைக்கொலை மூலம் மரணத்தை ஏற்றுக்கொள்ள இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 104 வயதுமிக்க முதியவர் டேவிட் குட்ஆல், 1914ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தவர். 1940களில் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த அவர், அங்குள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணிபுரிந்துள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக பணியாற்றிய இவருக்கு உடல்நிலையில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றாலும், முதுமையின் எல்லையில் இருப்பதை உணர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை கருணைக்கொலை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆஸ்திரேலியாவில் கருணைக்கொலைக்கு அனுமதி கிடையாது என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தற்கொலையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்திலும் இருந்துள்ளார். ஆனால், தனது மரணம் அழகாக இருக்கவேண்டும் என்பதால், தற்கொலை எண்ணத்தை மூட்டைக் கட்டிவிட்டு சட்டத்தின் பதிலுக்காக காத்திருந்தார்.
இரண்டு வருடக் காத்திருப்பு பலனளிக்காத நிலையில், மரணத்தைத் தழுவ சுவிட்சர்லாந்திற்கு சென்றார் டேவிட். கருணைக்கொலைக்கு எந்தவித தடையும் இல்லை என்பதால் சுவிட்சர்லாந்து வந்திருந்தாலும், ஆஸ்திரேலியாவில் தன் உயிர் பிரிந்திருக்கலாம் என சோகமுகமும் காட்டுகிறார் அவர்.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் சுவிட்சர்லாந்தில் உள்ள கருணைக்கொலை செய்யும் மையத்தில் டேவிட் குட்ஆலின் மரணம் நிகழ இருக்கிறது. இசை மேதை பீத்தோவனின் 9ஆவது சிம்ஃபனி இசை அறைமுழுவதும் ஒலிக்க, மரணத்தை ஆனந்தமாக ஏற்றுக்கொள்ள இருக்கிறார் மரணத்தின் தீராக்காதலன் டேவிட்.