கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 101 வயது முதியவர் ஒருவர் அதிலிருந்து மீண்டுள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,341 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1,33,057 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 800 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 66லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த 101 வயது முதியவர் ஒருவர் வைரஸ் தாக்கத்திலிருந்து குணமாகி மீண்டுள்ளார்.
மிஸ்டர் ‘பி’ என அந்நாட்டு ஊடகங்களால் குறிப்பிடப்பட்டுள்ள அந்த முதியவர் 1919-ம் ஆண்டு பிறந்தவர். கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ரிமினி நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சைகளைத் தொடர்ந்து மிஸ்டர் ‘பி’ பூரண குணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல்நலம் தேறிய நிலையில், நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பியுள்ளார். கரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பினால் 9100க்கும் அதிகமானோர் இறந்துள்ள நிலையில், மிஸ்டர் 'பி' குணமடைந்தது அந்நாட்டு மக்களிடையை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக ரிமினி பகுதியின் துணை மாநகரத்தந்தை குளிரியா லிசி தெரிவித்துள்ளார்.