சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார் கவிதா (31). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி இரவு தன்னுடன் வேலை பார்க்கும் காவலர் விஜயகுமாருடன் இருசக்கர வாகனத்தில் எம்.எல்.ஏ. விடுதிக்குப் பாதுகாப்பு பணிக்காகச் சென்றுள்ளார். அப்போது திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவிதா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் எடையுள்ள இரண்டு சங்கிலிகளைப் பறித்துச் சென்றனர்.
அதேபோல், திருவல்லிக்கேணி பல்லவன் சாலையிலும் சரஸ்வதி என்ற அரசு பெண் ஊழியரிடம் இதுபோல் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், 4 பவுன் தங்கச் சங்கிலியையும், அண்ணாசாலை தர்கா அருகே நடந்து சென்ற சாந்தி என்ற பெண்ணிடமும் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை போலீசார் பட்டாபிராமைச் சேர்ந்த கிருபா (19), ஆவடியைச் சேர்ந்த பால் சிவா (20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ஆறு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.