
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மர். விவசாயத் தொழில் செய்துவரும் இவர், அதே கடையநல்லூர் பகுதியில் பாஜகவின் ஒன்றிய தலைவராகவும் இருந்து வருகிறார். தர்மர் கடந்த திங்கட்கிழமையன்று தனது வயலுக்குச் செல்லும்போது புன்னையாபுரத்தில் உள்ள ஐஓசி பெட்ரோல் பங்கில் 311 ரூபாய் பணம் கொடுத்து தனது டூவீலரில் 3 லிட்டர் பெட்ரோல் போட்டுள்ளார்.
இதையடுத்து, பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற தர்மரின் டூவீலர் திடீரென ரிசர்வ் ஆகியுள்ளது. குழப்பமடைந்த தர்மர் திரும்ப பெட்ரோல் பங்கிற்கே சென்று பெட்ரோல் குறைவாக அடித்துள்ளதாக அந்த பங்கின் உரிமையாளரிடம் புகார் அளித்தார். அதன்பிறகு, வண்டியிலிருந்த பெட்ரோலை அளந்து பார்த்தபோது ஒன்றரை லிட்டர் பெட்ரோல்தான் இருந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த தர்மர் செல்போன் மூலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முன்னிலையில் வாளியில் பெட்ரோல் வாங்கி அளந்து பார்த்தபோது 3 லிட்டருக்கு பதில் 2.5 லிட்டர் மட்டுமே இருந்துள்ளது. அப்போது பெட்ரோல் அளவைக் குறைத்து வாடிக்கையாளர்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து பங்கின் உரிமையாளர், தர்மரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக தர்மர் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் விலையேற்றத்தால் ஏற்கனவே மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் பங்கில் இத்தகைய மோசடிகள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் நாள்தோறும் பொதுமக்களின் பணம் கோடிக்கணக்கில் ஏமாற்றப்படுகிறது.