Skip to main content

பூஜை செய்தால் திருமணம் நடக்கும்; ஏமாற்றிய சாமியாருக்கு கத்தி குத்து 

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

 youth arrested for stabbing a preacher

 

செஞ்சி அருகே உள்ள பெருங்கப்பூர் மாந்தோப்பில் நேற்று முன்தினம் சாமியார் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பின்பு அவரின் முனகல் சத்தம் கேட்டு கணபதி என்பவர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து சாமியார் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

 

 youth arrested for stabbing a preacher

 

முதற்கட்டமாகச் சாமியாரின் தொலைப்பேசியை கைப்பற்றி அவருடன் தொடர்பு கொண்டவர்களை விசாரித்ததில் ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமால் என்ற இளைஞரை காவல்துறை கைது செய்தனர். பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு 35 வயதாகிறது. நீண்ட நாட்களாகத் திருமணம் நடக்கவில்லை. இதற்காகப் பரிகாரம் தேடி சாமியார் சரவணனிடம் சென்றேன். அவர் என்னிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு பரிகார புகை நடத்தினார். ஆனால் திருமணம் கைகூடவில்லை. மறுபடியும் என்னிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு பரிகார பூஜை நடத்தினார். ஆனால் அப்படியும் திருமணம் நடக்கவில்லை. இதுகுறித்து சாமியாரிடம் கேட்டபோது,  அவர் சரிவரப் பதில் சொல்லாமல் ஏமாற்றியிருக்கிறார்.

 

இதையறிந்த திருமால் சாமியாரிடம் தந்திரமாகப் பேசி மீண்டும் நள்ளிரவு பூஜை செய்வதற்குத் தான் பணம் ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு பெருங்காய்பூர் கிராமத்தில் உள்ள காளி கோயிலுக்கு வருமாறும் அழைத்துள்ளார். பணத்துக்கு ஆசைப்பட்ட சாமியார் சரவணன் அவரை நம்பி நள்ளிரவு பூஜை செய்ய பெருங்காப்பூர் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்கே திருமாலுக்கும் சாமியார் சரவணனுக்கும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு லட்ச ரூபாய் பணம் செலவு செய்தும் எனக்குத் திருமணம் நடக்கவில்லையே உனது மந்திரம் ஒன்றும் வேலை செய்யவில்லை என்று கோபத்துடன் திருமால் கேட்டுள்ளார். இதையடுத்து இருவருக்குத் தகராறு முற்றவே திருமால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாமியாரின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் சாமியாரின் குடல் வெளியே சரிந்துள்ளது.

 

இதைக்கண்டு திருமால் பயந்து போக, உடனே சாமியார் திருமாலிடம் கெஞ்சி என்னை எப்படியாவது காப்பாற்று என்று அழுதுள்ளார். அதனால் இறக்கப்பட்ட திருமால் தனது இருசக்கர வாகனத்தில் சாமியாரை உட்கார வைத்து மருத்துவமனை நோக்கி அழைத்து வரும்போது இருசக்கர வாகனத்திலிருந்து சாமியார் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த சாமியார் இறந்து போனதாகக் கருதிய திருமால் சாமியார் சரவணனை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பி ஓடி விட்டார். மறுநாள் காலை கணபதி என்பவர் தன் தோட்டத்திற்குச் செல்லும் போது தற்செயலாகச் சாமியாரைப் பார்த்ததையடுத்து காவல்துறைக்கும் ஊர் மக்களுக்கும் தகவல் கூறி சாமியாரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். முதலில் இதுகுறித்து சாமியாரிடம் கேட்டபோது, மூடி மறைத்துள்ளார். பின்பு  சாமியாரின் கைப்பேசியில் பேசியவர்களின் அடையாளத்தைக் கண்டறிந்து அதன் மூலம் ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமாலை காவல்துறை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்