மயிலாடுதுறை அருகே தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தோடு விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில பாதங்களாக மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக எலந்தங்குடி என்ற பகுதியில் பாலம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு அதன் மேல் கம்பிகள் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
எலக்ட்ரீசியன் வேலை செய்துவரும் மணிகண்டன் விவசாய நிலத்தில் வேலை செய்வோருக்கு சாப்பாடு வாங்குவதற்காக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது உணவு வாங்கிக் கொண்டு திரும்பிய பொழுது பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் தவறி பள்ளத்தில் இருசக்கர வாகனத்தோடு விழுந்தார். இதில் நீட்டிக் கொண்டிருந்த கம்பிகளில் தலை சிக்கியதால் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்துள்ளார்.
இரவு நேரம் என்பதால் யாருக்கும் தெரியாமல் போனது. அதிகாலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்கு வந்த போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பாலம் கட்டப்பட்டு வரும் பகுதிக்கு அருகே எந்த விதமான அறிவிப்புப் பலகையும் வைக்கப்படாததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.