திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ளது அண்ணா பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் செல்வதற்காக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பேருந்து நிலையத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து வந்துகொண்டிருந்த தடம் எண் 212 H என்ற அரசுப் பேருந்து, திருப்பதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பேருந்து நிறுத்தப்பட்டவுடன் அதிலிருந்து டிரைவர், கண்டக்டர் மற்றும் சில பயணிகள் உள்ளிட்டோர் கீழே இறங்கி அங்கிருந்த உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றனர். இதனிடையே, அந்த பேருந்தில் ஏறிய இரண்டு இளைஞர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி என்ற பகுதிக்கு டிக்கெட் எடுத்துள்ளனர்.
மேலும், பயங்கர கஞ்சா போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் பேருந்திற்குள் அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்தனர். ஒருகட்டத்தில், தலைக்கேறிய போதையில் இருந்த இளைஞர் ஒருவர் பேருந்தில் டிரைவர், கண்டக்டர் இல்லாததைக் கண்டவுடன், நேராக டிரைவர் சீட்டுக்குச் சென்று ஆளில்லாத பேருந்தை இயக்க முயன்றுள்ளார். ஒரு கணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சில பெண்களும் பயணிகளும் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அதன்பிறகு, அவர்கள் ஓடிச் சென்று இச்சம்பவத்தை உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த டிரைவரிடம் கூறியுள்ளனர். பின்னர், பதறியடித்துக் கொண்டு பேருந்திற்குள் ஓடி வந்த டிரைவரும் கண்டக்டரும் கஞ்சா போதையில் இருந்த இளைஞரைப் பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டனர். இதையடுத்து, அங்கிருந்த ஒரு பயணி இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, இதைப் பார்த்துக் கொண்டிருந்த போதை இளைஞர், "அண்ணா வீடியோலாம் எடுக்காதணா.. நானே யூட்டியூப் சேனல் வச்சிருக்கேன். அப்புறம் நானும் வீடியோ எடுப்பேன்” எனப் பேசிக்கொண்டிருந்தார்.
மேலும் அங்கிருந்த பயணிகள், “யாரை கேட்டுடா பஸ்ஸ எடுத்த... ஏதாவது ஆச்சுன்னா யாருடா பொறுப்பு...” என அந்த போதை இளைஞரை அங்கிருந்து விரட்டியடித்தனர். அதன்பிறகு, அந்த அரசுப் பேருந்து சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டது. ஆனால், அங்கிருந்து செல்லாத போதை இளைஞர்கள் அந்த உணவகத்தில் தகராறு செய்துவிட்டு வேறொரு அரசுப் பேருந்தில் ஏறி ஆந்திர மாநிலம் நகரிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருத்தணி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று அந்த உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, கஞ்சா போதையில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென பேருந்தை இயக்க முயன்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகிறது.