விழுப்புரம் மாவட்டம், சேர்ந்தனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (27 வயது). இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (19/08/2021) பச்சையப்பன் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர், அன்று இரவு தனது அறைக்குள் சென்று அவரது மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கணவர் தற்கொலை செய்துக் கொண்டது அவரது மனைவி தெரியவே, அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவலறிந்த பச்சையப்பனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரின் உடலைப் பார்த்துகதறி அழுதனர். இது குறித்து, வளவனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பச்சையப்பன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பச்சையப்பன் செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் நிறைய கடன் வாங்கி ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார். கடன் கொடுத்த நண்பர்கள் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து போன பச்சையப்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரம்மி விளையாட்டில் கடனாளியாகி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வளவனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.