தமிழகத்தில் ஜூலை 9ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், தேனாம்பேட்டை, அயனாவரத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆவடியில் 6 சென்டிமீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 5.2 சென்டிமீட்டர் மழையும், திருத்தணி 5 சென்டிமீட்டர் மழையும், சோழவரம் 4.2 சென்டிமீட்டர் மழையும், செங்குன்றம் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வானிலை குறித்த பல்வேறு அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூலை 5 முதல் ஜூலை 10ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தெற்கு, மத்திய, வடக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.