தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் மே 10- ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு மே 24- ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
இருப்பினும் தமிழகத்தில் இளைஞர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திரையுலகினர் அதிகளவில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றன.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆர்.கே.கருப்பத்தேவர் தெருவில் நகைப்பட்டறை உரிமையாளர் சரவணன் என்பவர் கடன் பிரச்சனைக் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். மனைவி ஸ்ரீநிதி பூங்கோதை, குழந்தைகள் மகாலட்சுமி (வயது 10), அபிராமி (வயது 5), அமுதன் (வயது 5) ஆகியோருக்கு விஷம் தந்து விட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உசிலம்பட்டி காவல்துறையினர், ஐந்து பேரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.