விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட செல்போன்கள் காணாமல் போயுள்ளன. இதனைக் கண்டுபிடிப்பதற்காக மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, காவல்துறையினரை முடுக்கி விட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட குற்றப் பதிவேடுகள் துறையின் துணை கண்காணிப்பாளர் உமா சங்கர் தலைமையில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை இதற்காக அமைக்கப்பட்டது. இத்தனிப்படை காவல்துறையினர், காணாமல் போன செல்போன்கள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு, கடந்த ஒரு மாதத்தில் காணாமல் போன பெரும்பான்மையான செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
காணமால்போன் செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக செல்போன்களின் ஐ.ம்.இ. நம்பர்களைக் கொண்டு தற்போது பயன்படுத்தி வரும் சிம் கார்டு நம்பரை தொடர்பு கொண்டு அவர்களிடம் விசாரணை செய்து அதன் மூலம் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் பல செல்போன்கள் கேரளா, மும்பை போன்ற வெளி மாநிலங்களில் விற்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இப்படி போலீஸார் பறிமுதல் செய்துள்ள செல்போன்களில் மதிப்பு ரூ.20 லட்சம் எனப்படுகிறது. இதில் விலை உயர்ந்த 106 ஆண்ட்ராய்டு செல்போன்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மாவட்ட கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும், இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சிறப்பாக பணியாற்றி ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கண்டுபிடித்த தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் அளித்துள்ளார். ஒரே நேரத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கண்டுபிடித்துச் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கக் காரணமாக இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு செல்போன் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.