![young girl lost their life after being told not to talk to her boyfriend](http://image.nakkheeran.in/cdn/farfuture/dY3WHj8IvVf2GqSllKbx-T0yoOnLTkiW-CkSdW6xEdw/1693911837/sites/default/files/inline-images/th-3_568.jpg)
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் முள்ளேரி பகுதியை சார்ந்தவர் வீரபத்திரன். தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி பத்மா என்கிற மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான தீபிகா (18) பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டு மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீபிகா அடிக்கடி ஆண் நண்பருடன் செல்போன் பேசி வந்த நிலையில் தாய் பத்மா இதனைக் கண்டித்துள்ளார். தொடர்ந்து இப்படியே செய்து வந்தால் திருமணம் செய்து விடுவதாகவும் கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற தீபிகா அதன்பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பெற்றோர்கள் தீபிகாவை எங்கு தேடிப் பார்த்தும் காணவில்லை என்பதால் இது தொடர்பாக மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே, அதே பகுதியில் கன்னியம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மோட்டார் போடுவதற்காக ரமேஷ் என்பவர் சென்ற போது விவசாய கிணற்றில் தீபிகா உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தொடர்ந்து மறைமலைநகர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.