தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தமிழக முதலமைச்சர் பூரண குணமடைய சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் அக்கறைக்கு நன்றி அண்ணாமலை. எங்கள் கூட்டணியின் தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கள் மீது எப்போதும் அன்பும், மரியாதையும், கரிசனமும் உள்ளவர். இதை சமீபத்தில் கரூரில் நடந்த அரசு விழாவில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆகவே எங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜ.க. கொடுக்கிற மரியாதையை உலகறியும். இதோ மரியாதையோடு நீங்கள் ஒழித்துக்கட்டிய உங்கள் கூட்டணி கட்சிகளின் பட்டியல். PDP,JDU, JDS, INLD, AGP,BSP etc இந்த பட்டியலில் இப்போது சிவசேனாவும், அ.தி.மு.க.வும்! நீங்களெல்லாம் கூட்டணி பற்றிப் பேசலாமா?" என்று அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.