கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய தீபு உள்ளிட்டோர், நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தின் அடுத்த விசாரணையின் போது ஆஜராகவில்லை என்றால், பிடிவாரண்ட் பிறப்பிக்க அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017- ஆம் ஆண்டு ஏப்ரல் 24- ஆம் தேதி நுழைந்த கும்பல், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு உள்ளே சென்றது. பங்களாவில் இருந்த சில ஆவணங்களைக் கொள்ளை அடித்துச் சென்றது.
இவ்வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால், கடந்த ஆகஸ்ட் 21- ஆம் தேதி பிடிவாரண்ட் பிறபித்தது. இந்தப் பிடிவாரண்டைத் திரும்பப் பெறக் கோரி தீபு உள்ளிட்டோர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், கேரளாவில் இருக்கும் தங்களால் கரோனா காரணமாக நீலகிரி மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும், தமிழகத்திற்கு வந்தால் தங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் அடுத்த விசாரணையின் போது தீபு, சதீசன், சந்தோஷ் ஆகியோர் ஆஜராக வேண்டும். இல்லையென்றால், மீண்டும் அவர்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கலாம் என உத்தரவிட்டார்.