இந்திய நாட்டின் 71 வது குடியரசு தினம் நாடு முழுக்க நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் வித்தியாசமாக இன்று காலை குடியரசு தின விழாவை ஊரில் உள்ள மாணவ மாணவியர்கள் தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து கொண்டாடி சிறப்பித்துள்ளார்கள்.
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் விடியல் சமூகநல அறக்கட்டளை, பல்வேறு அமைப்புகள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் இணைந்து குடியரசு தினவிழா நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் நாட்டின் மூவர்ண கொடியை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தயார் செய்து, அதனை ஏந்தி மனித சங்கிலி அமைத்திருந்தனர்.
தமிழ்நாட்டில் புளியம்பட்டியில் தான் முதல் முறையாக இவ்வளவு (2 கிலோமீட்டர்) நீளமுள்ள மிக நீண்ட இந்திய தேசிய கொடி அமைக்கப்பட்டு கையில் ஏந்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புளியம்பட்டி டானா புதூர் நால் ரோட்டில் தொடங்கிய மனிதச்சங்கிலி கோவை - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பராசக்தி கோவிலில் நிறைவடைந்தது. இதில் தேசப்பற்று, தேச ஓற்றுமை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி காப்போம், இந்திய தேசத்தை காப்போம் என முழக்கங்கள் எழுப்பினர்.