ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, காட்டெருமை, கரடி, புலி, சிறுத்தை, மான் என பல வகை விலங்கினங்கள் வாழ்ந்து வருகிறது. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது காட்டின் எல்லைகளில் உள்ள விவசாய தோட்டங்களிலும் புகுந்து ஆடு, மாடு போன்ற உயிரினங்களை பிடித்து தின்று சுவைத்து பழகிவிட்டது.
அப்படித்தான் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பெரியகுளம் என்ற பகுதியில் சென்ற ஒரு மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் புகுந்து விவசாயிகள் வளர்த்துவரும் கால்நடைகளை அடித்து கொன்று தனக்கு உணவாக்கி அட்டகாசம் செய்து வந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளை வனத்துறையினர் கண்காணித்தனர். பின்னர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியை கண்டறிந்து வரதபாளையம் என்ற பகுதியில் உள்ள விவசாயி குட்டி என்பவரது தோட்டத்தில் சிறுத்தையை பிடிக்க, சென்ற ஒரு வாரமாக கூண்டு வைத்து காத்திருத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை வனத்துறையினர் வைத்த அந்த கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை கால்நடை மருத்துவர் ,சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதையடுத்து கூண்டில் பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட சிறுத்தை மிகவும் ஆக்ரோசமாக உர்....உர்...என கத்தியதோடு, அதன் கோபக் கண்களில் எங்களின் இயல்பான வாழ்க்கைக்கு மனிதர்களான நீங்கள் எதிரானவர்கள் என்பதுபோல பார்வையை வெளிப்படுத்தியது.