
மூடப்படாத மழைநீர் வடிகால் தொட்டியில் மூன்று வயது குழந்தை விழுந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆனால் அவை முறையான தடுப்புகள் அமைக்காமல் பணிகள் கிடப்பில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் வசித்து வரும் உதயன்-மீனா தம்பதியின் மூன்று வயது குழந்தை யோக பிரதிஷ்டா வீட்டின் முன்னே விளையாடிக் கொண்டிருந்தார்.
விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தை எதிர்பாராதவிதமாக மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து நின்ற வடிகால் பள்ளத்தில் விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டனர். தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணியின் பொழுது முறையான தடுப்புகள் அமைக்காமல் அலட்சியமாக விடப்பட்டிருப்பதால் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பள்ளத்தில் விழுந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.