தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை இராமச்சந்திரனார் பூங்காவில் தொடங்கிய பேரணி அரண்மனை வாசல் முன்பு ஆர்ப்பாட்டத்துடன் நிறைவுபெற்றது. பேரணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், இளங்கோ, தமிழரசன் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மதலைமுத்து ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் கண்னையன் பேரணியை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார். இப்பேரணியில் ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கோரிக்கை உரையாற்றினார்கள்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும், இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், ஊதியக்குழு அறிவிப்பில் மறுக்கப்பட்ட 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மேலும் தமிழக அரசு மாநில உயர்மடட குழு உறுப்பினர்களை அழைத்து கோரிக்கைகளுக்கு தீர்வு காணவில்லையென்றால் மே 8ம் தேதி லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு ஊழியர்கள் பங்கேற்கும் கோட்டை நோக்கிய முற்றுகை போராட்டத்தை எழுச்சியுடன் நடத்துவோம் என தெரிவித்தனர்.