தமிழகத்தில் 44 நாட்களுக்குப் பிறகு சென்னையைத் தவிர பிறமாவட்டங்களில் நேற்று (07/05/2020) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மதுப் பிரியர்கள் டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று (07/05/2020) ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஐந்து மண்டலங்களில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் மட்டும் ரூபாய் 37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மேலும் சென்னை மண்டலத்தில் ரூபாய் 34 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூபாய் 32 கோடி, சேலம் மண்டலத்தில் 33, கோடி, கோவை மண்டலத்தில் 34 கோடி என மொத்தம் 170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
இரண்டாவது நாளாக இன்றும் டாஸ்மாக் கடைகள் முன்பு மதுப் பிரியர்கள் குவிந்துள்ள நிலையில், ஈரோடு, திருவள்ளூர், திண்டுக்கல்லில் குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.