Skip to main content

நீதிமன்றத்தில் வேலை; 5 லட்சம் மோசடி செய்த நீதிமன்ற ஊழியர் கைது!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

work in court; 5 lakh fraud court employee arrested!

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செழியன்(52). இவர் விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற எண் 3ல் பதிவறை எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு பழக்கமான விருத்தாசலம் கடை வீதியில் காபி கடை நடத்தி வரும் ரகுநாதன் மகன் ஸ்ரீராம் என்பவரிடம் 'எனக்கு நிறைய நீதிபதிகள் தெரியும். எல்லோரும் எனக்கு நன்கு பழக்கமானவர்கள். அவர்களிடம் கூறி உனக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருகிறேன்' என்று கூறியுள்ளார். அதற்காக ரூபாய் 3 லட்சம் கேட்டுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய ஸ்ரீராம் கலைச்செழியனிடம் ரூபாய் 3 லட்சம் கொடுத்துள்ளார். இதேபோல் பெண்ணாடம் கடை வீதியில் கணினி மையம் நடத்தி வரும் கோவிந்தராஜ் மகன் சண்முகசுந்தரம் என்பவரிடமும் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 2 லட்சம் பணம் வாங்கி உள்ளார்.

 

இருவரிடமும் வேலை வாங்கித் தருவதாக மொத்தம் 5 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அவர்கள் இரண்டு பேருக்கும் வேலை வாங்கிக் கொடுக்காமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் புகார் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அவர் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி கலைச்செழியன் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அமலா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

தொடர்ந்து தலைமறைவாக இருந்த கலைச்செழியனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலை வாங்கித் தருவதாகப் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். அதையடுத்து கலைச்செழியனை போலீசார் கைது செய்து விருத்தாச்சலம் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறைச் சாலையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்