Skip to main content

அதிகாரிகளின் கால்களில் விழுந்து கதறிய பெண்கள்

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
The request of the tribal people


தங்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தாதீர்கள் என்று அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளனர் பழங்குடியின மக்கள். 
 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் பழங்குடியின சுற்றுலா கலாச்சார கிராமம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த அரசு ரூ.7 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது இந்த திட்டத்தை பவானிசாகர் வனப்பகுதியில் செயல்படுத்தாமல், தலமலை கிராமத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பழங்குடியின மக்கள் விவசாயம் செய்துவந்த 52 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியானது. 
 

இதனை அறிந்த பழங்குடியின மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்களது நிலத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளுக்கு மனு மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அம்மக்கள் கூடி முடிவு எடுத்தனர். 
 

இந்த நிலையில் அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தை பார்வையிட சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உபத்யா, ஈரோடு மாவட்ட வருவாய்துறை அதிகாரி கவிதா மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தலமலைக்கு சென்றனர். அப்போது அந்த அதிகாரிகளை சந்திக்க காத்திருந்த பழங்குடியின மக்கள், அதிகாரிகள் வந்தவுடன் அவர்களிடம். மூன்று தலைமுறையாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். இந்த இடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.
 

அப்போது சில பெண்கள், தலமலைக்கு வந்த அதிகாரிகள் காலில் விழுந்து கதறி அழுதார்கள். எங்க நிலங்களை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார்கள். அம்மக்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், உங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்போம். கவலைப்படாதீர்கள். உங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுங்கள். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று கூறிவிட்டு திரும்பியுள்ளனர்.
 

நடந்தது குறித்து பழங்குடியின மக்கள் கூறியதாவது, நாங்கள் 25 குடும்பம் இங்கு இருக்கிறோம். கடந்த 3 தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலங்களில் மழைகாலங்களில் ராகி, எள்ளு, சோளம் பயிர்செய்கிறோம். இதுதான் எங்களுடைய வாழ்வாதாரம். இதற்காக கடந்த 70 ஆண்டுகளாக கந்தாயம் கட்டி வருகிறோம். இங்கு அருங்காட்சியகம் அமைக்க நிலத்தை விட்டுத்தர மாட்டோம் என கூறினோம்.
 

எங்கள் கோரிக்கைகளை கேட்ட அதிகாரிகள், விவசாயம் செய்யும் நிலத்தை நாங்கள் கையகப்படுத்த மாட்டோம். புறம்போக்கு நிலத்தை மட்டுமே எடுத்துக்கொள்வோம். நீங்கள் பயன்படுத்தி வந்த நிலத்துக்கான ரசீதுகள், சான்றிதழ்களை தாளவாடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வாருங்கள் என தெரிவித்தனர். அரசு எங்கள் நிலத்தை கையகப்படுத்தாது என்ற நம்பிக்கையில் உள்ளதாக தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்