Skip to main content

அழிக்கவும் பிரிக்கவும் முடியாத ஓரினக் காதல்! -தோழிகளைத் தேடும் காவல்துறை

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

andhra karnool police searching youngsters

 

 

‘என் பொண்ண காணோம்யா..  இன்னார் வீட்டு பையன் எம்பொண்ணை ஏமாத்தி கூட்டிட்டு போயிட்டான்யா..  எப்படியாச்சும் கண்டுபிடிச்சு என்கிட்ட ஒப்படைங்கய்யா…’  இதுபோன்ற புகார்களைப் பார்த்திருக்கும் ஆந்திர போலீஸார், முதல்முறையாக ஒரு வித்தியாசமான புகாரைக் கண்டு ‘ஜெர்க்’ ஆனார்கள். 

 

புகார் இதுதான்; ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த வெண்ணிலா(20), கண்மணி(21) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய இருவரும் தோழிகள். சிறுவயது முதலே இணை பிரியாமல் வலம் வந்த இருவரும், இப்போது எங்கோ தலைமறைவாகிவிட்டனர்.

 

இருவரின் பெற்றோரும் பல இடங்களில் தேடிப் பார்த்தும், துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், கண்மணி தனது தாயாரின் செல்ஃபோனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் “நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். இருவரும் திருமணம் செய்து, புதுவாழ்க்கையைத் துவங்க இருக்கிறோம். எங்களின் காதலை அழிக்கவோ, பிரிக்கவோ முடியாது.  எனவே,  தேட வேண்டாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

தற்போது இரு பெண்களின் பெற்றோரும், “எங்களது பிள்ளைகளைக் கண்டுபிடிச்சுக் கொடுங்க..” என்று  கர்னூல் போலீஸாரிடம் முறையிட, இரு பெண்களையும் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளது காவல்துறை. 

 

காவல்துறை அந்த இரு பெண்களையும் தேடுவதெல்லாம் சரிதான்! அதேநேரத்தில், ‘ஓரினச்சேர்க்கை’ குறித்து சட்டம் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்! ‘அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என, 2017-ல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டப்பிரிவு 377-ஐ (இரு சட்டபூர்வ வயதினை அடைந்த ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு) ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

 

கடந்த 2018, செப்டம்பர் 6-ஆம் தேதி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்துள்ள தீர்ப்பில்  ‘நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதனை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தற்போது ஏற்புடையதாக இருக்காது. எனவே, அரசியல் சட்டத்தின் 377-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது. தன்பாலின உறவு என்பது சட்ட விரோதமானது அல்ல.’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதனால், இந்திய தேசத்தில், சட்டபூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.

 

ஆனால், என்னதான் சட்டமாக்கப்பட்டாலும், உலகமே டிஜிட்டலுக்கு மாறினாலும், கலாச்சாரத்தை கைவிட முடியாத அந்த இரு பெண்களின் பெற்றோருக்கு அத்தகைய பரிதவிப்புதான்.

 

 

சார்ந்த செய்திகள்