தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 50 லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைள் தொடர்பாக அமைச்சர்கள், தலைமை செயலாளர், டிஜிபி, ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, "தமிழகம் உள்பட உலகம் முழுவதும் 199 நாடுகளில் கரோனா தொற்று பரவியுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஈரோட்டில் 10 பேருக்கும், சென்னையில் 5 பேருக்கும், மதுரையில் 1 பேருக்கும், கரூரில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் மட்டும் தான் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வர வேண்டியுள்ளது. கரோனா தடுப்பு பணிக்காக 1.50 கோடி முகக் கவசங்களை தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது. 25 லட்சம் N-95 முகக்கவசங்கள் வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படும். கரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து மக்கள் தங்களே தனிமைப்படுத்திக் கொள்வது தான். கரோனா பரவலில் தமிழகம் இரண்டாவது கட்டத்திலிருந்து மூன்றாவது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கும் பணி தீவிரம். பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது.
வீட்டு வாடகைதாரர்களின் பிரச்சனை பரிசீலிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தேவையில்லை" என்றார்.