Skip to main content

வீட்டு வேலை செய்வதுபோல் நடித்து நகை திருடிய பெண்! 

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

The woman who pretended to do housework and stole jewelry!

 

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள நகை கடைகளுக்கு நேற்று (19.12.2021) ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் சென்று வைர வளையலை விற்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். நகைக் கடைக்காரர்கள் யாரும் வாங்கவில்லை. மேலும், அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்கள் 2 பேரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் மதுரையைச் சேர்ந்த முத்துப்பேச்சி (32), அவருடைய நண்பரும், கூட்டாளியுமான விருதுநகரைச் சேர்ந்த மாரிசெல்வன் (27) என்பது தெரியவந்தது.

 

இதில் முத்துப்பேச்சி, தொழில் அதிபர்களின் வீடுகளுக்கு வேலைக்குச் சேர்ந்து பணம், நகை திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், காளப்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி வீட்டில் முத்துப்பேச்சி வேலை செய்துகொண்டிருந்தபோது, பாலாஜி தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றார். அதைப் பயன்படுத்தி வீட்டில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வைர வளையலை முத்துப்பேச்சி திருடியதோடு, அந்த வளையலை விற்பதற்காக தனது நண்பர் மாரிசெல்வனுடன் டவுன்ஹால் பகுதிக்கு வந்தபோது போலீசிடம் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

The woman who pretended to do housework and stole jewelry!

 

இதுகுறித்து பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப் பதிவுசெய்து முத்துப்பேச்சி, மாரிசெல்வன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். விசாரணையில், முத்துப்பேச்சி பீளமேட்டில் வேலை பார்த்த 2 வீடுகளில் 10 பவுன் நகை உட்பட மொத்தம் 15 பவுன் நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 15 பவுன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்