சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகளில் ஏற்படும் திடீர் விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறது. நேற்று முன்தினம் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில், பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு, 14 பேர் உயிரிழந்தது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பிலும், கர்நாடக அரசு சார்பிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவிகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரியலூரில் நாட்டுப் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 4 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் என்ற பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் இன்று திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடித் தீயை அணைத்து வருகின்றனர்.