![woman has filed a police complaint against three people Dharmapuri](http://image.nakkheeran.in/cdn/farfuture/hQ0m_8Qaq1ZKNrXLU16f1pVuCosIZONjTGfuhpvXad4/1675402507/sites/default/files/inline-images/993-ashok_14.jpg)
தர்மபுரி அருகே, பெண் கட்டடத் தொழிலாளி ஒருவரை மூன்று பேர் சேர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திப்பட்டியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தர்மபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
புகார் குறித்து அந்தப் பெண் கூறியது: எனக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக நானும் என் கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். குழந்தைகள் கணவருடன் வசிக்கின்றனர். நான் கட்டட வேலைக்குச் சென்று பிழைத்து வருகிறேன். பென்னாகரம் ரங்காபுரம் காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி முருகன். இவருடன் கட்டட வேலைக்குச் சென்று வந்ததில் எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பாலத்காரம் செய்துள்ளார். பென்னாகரம், மாங்கரை, மோட்டுப்பட்டி, குட்டம்பட்டி, வண்ணாத்திப்பட்டி, கரியம்பட்டி, காட்டுக்கொல்லை ஆகிய இடங்களுக்கு முருகனுடன் கட்டட வேலைக்குச் சென்ற போதெல்லாம் 150க்கும் மேற்பட்ட முறை என்ன பலவந்தப்படுத்தி உறவு கொண்டுள்ளார். அவர் எனக்குத் தெரியாமல் அலைபேசியில் என்னை ஆபாசமாக வீடியோ படம் எடுத்து வைத்துக் கொண்டார். அதன்பிறகு, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே என்னை மேலும் சீரழித்தார்.
இதுமட்டுமின்றி அவ்வப்போது பணமும் கேட்டு மிரட்டி வந்தார். இதனால் வேறு வழியின்றி நான், எனக்குத் தெரிந்த பலரிடம் கடன் வாங்கி இதுவரை முருகனிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். நான் ஆடையில்லாமல் இருப்பது போன்ற 15க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்து வைத்திருக்கிறார். முருகன் மட்டுமின்றி, அவருடைய கூட்டாளியான மேஸ்திரி காளியப்பன், மேஸ்திரி கணேசன் ஆகியோரும் என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவர்கள் மூன்று பேரும் இரவு நேரத்தில் என் வீட்டிற்குள் புகுந்து என்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர்கள் என் கை, கால்களை கட்டிப்போட்டும் வாயை துணியால் அடைத்து வைத்தும் சித்திரவதை செய்தனர். அவர்கள் என் மீது சிறுநீர் கழித்தனர். இதையெல்லாம் வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினர். நானும் உயிருக்குப் பயந்து யாரிடமும் புகார் அளிக்கவில்லை.
இவர்களின் கொடுமை தாங்க முடியாததால் வண்ணாத்திப்பட்டியில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு, மாரண்டஅள்ளிக்குச் சென்றுவிட்டேன். இவர்களுக்கு மாதேஸ் என்பவர் உடந்தையாக இருக்கிறார். எனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஏற்கனவே பென்னாகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னிடம் மட்டும் விசாரித்துவிட்டு புகாரை கிடப்பில் போட்டுவிட்டனர். என்னிடம் விசாரணை நடத்திய காவலர்களில் ஒருவர், நீ அழகாகத்தானே இருக்கிறாய்... தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாமே என அருவருக்கத்தக்க வகையில் பேசினார். அந்தக் காவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கூறினார். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுப்பாலியல் விவகாரம் மாரண்டஅள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.