தமிழ்த் திரைப்பட நடிகைகளில் மறக்க முடியாதவர்களில் ஒருவர் சில்க் ஸ்மிதா. இவர் நடித்த படங்களின் பாடல்கள் இன்றும் கொடி கட்டிப் பறக்கின்றன. தற்போதைய படங்களில் வரும் 'ஐட்டம் சாங்ஸ்' என்று சொல்லப்படும் வகையில் அந்தக் காலகட்டத்தில் எக்கச்சக்க பாடல்களில் ஆடி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா இருந்தால்தான் ஒரு பொழுதுபோக்குப் படம் முழுமையடையும் என்று சொல்லும் அளவுக்கு அவரை நடிக்க வைத்தனர் இயக்குநர்கள்.
அவரது கண்களைப் பார்த்தாலே ரசிகர்கள் கிறங்கிப் போவார்கள். மேலும் அவரது கவர்ந்திழுக்கும் வனப்பும், மாடர்ன் டிரஸ்களும் கூடுதல் ப்ளஸ் பாயிண்ட்டாகவே இருந்தது. இதுவே குறுகிய காலத்தில் அவர் உச்சத்திற்குச் செல்லக் காரணமாக இருந்தது. எப்படி சினிமாவின் உச்சத்திற்குக் குறுகிய காலத்தில் சென்றாரோ, அதேபோல் குறுகிய காலத்திலேயே மண்ணுலகையும் விட்டு விடை பெற்றார் ஸ்மிதா. .
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் தமிழ்த் திரை உலகமே இந்தச் சம்பவத்தால் சோகத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியது. அவருடைய தற்கொலை இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா என்பவர் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், ''அவரின் இறுதிச் சடங்கிற்கு திரையுலகைச் சேர்ந்த யாரும் வராத நிலையில் ஒரே ஒரு நடிகர் மட்டும்தான் வந்திருந்தார். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை சில்க் ஸ்மிதா நடிகர் அர்ஜுனிடம் 'நான் இறந்து போனால் என்னுடைய இறுதி நிகழ்விற்கு நீ வருவியா' எனக் கேட்டுள்ளார். அதைக் கேட்ட அர்ஜுன், ‘ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. இதெல்லாம் என்ன பேச்சு' என சில்க் ஸ்மிதாவிடம் தெரிவித்துள்ளார். நாட்கள் செல்லச் செல்ல இந்த விஷயத்தை அர்ஜுன் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், சில நாட்கள் கழித்து சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அர்ஜுன் உடனடியாக அவருடைய இறுதிச்சடங்கிற்கு வந்ததோடு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்'' எனத் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா.