கிராம கோயிலை அறநிலையத்துறை கைப்பற்ற வந்துவிட்டதாக கூறி திரண்டிருந்த பெண்கள் சாமியாட, ஆண்கள் கோபுரத்தில் ஏறிநின்று முழக்கமிட்டு அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள மாங்குடி கிராமத்தில் உள்ள பழமையான முத்துமாரியம்மன் கோயில் கிராம கோயிலாக இருந்து வருகிறது. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இரு தரப்பினரிடையே உரிமை பிரச்சனை எழுந்ததால் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பல வருடங்களாக தீர்வு இல்லாமல் கோயில் உள்ளதால் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில்தான் இன்று (11/01/2022) இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறந்தாங்கி போலீசாருடன் கோயிலுக்கு வந்து கோயில் சாவியை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தகவல் ஊருக்குள் வேகமாக பரவ கோயிலில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டனர். கிராம கோயிலை அறநிலையத்துறை கைப்பற்ற விடமாட்டோம் என்று கூறி கோயில் வாசலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் இருந்த ஏராளமான பெண்கள் சாமியாடினார்கள். இளைஞர்கள் கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று முழக்கமிட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் வழிபட வேண்டும். அதனால் தான் அதிகாரிகள் வந்திருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு எடுங்கள் என்று கூறியதுடன் அங்கிருந்து சென்றனர்.