புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள வடகாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட எல்.என்.புரம் ஊராட்சி அணவயல் கிராமத்தில் உள்ள கிராம காவல் தெய்வமான தாணான்டி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்த ஒரு நபர் கோயில் பூசாரியிடம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி அர்ச்சனை பொருட்களை வாங்கிப் பார்த்த போது அதில் தேங்காய் இல்லையே என்று பூசாரி கூறியுள்ளார். உங்க வீட்ல தேங்காய் இருந்தால் எடுத்து வந்து அர்ச்சனை செய்ங்க அதுக்கு காசு தந்துடுறேன் என்று வந்த நபர் கூறியுள்ளார்.
கோயில் அருகிலேயே பூசாரி ராமசாமி வீடு இருப்பதால் தன் வீட்டிற்குச் சென்று தேங்காய் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பக்தராக வந்த நபரை காணவில்லை. அர்ச்சனை செய்ய வந்த நபரை காணவில்லையே என்று தேடிவிட்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோயிலில் உள்ளே பக்தர் நிற்கும் இடத்தில் இருந்து சுமார் 7 அடி தூரத்தில் உள்ள உற்சவர்களான தாணான்டியம்மன், பெரியநாயகியம்மன் அம்பாள், இரு அம்பாள் சிலைகளுக்கு மத்தியில் இருந்த ஐயனார் சிலையில் கிடந்த நாலரை பவுன் தங்க நகைகள் காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது. அம்பாள்கள் கழுத்தில் கிடந்த தங்கத் தாலி உள்ளிட்ட நகைகள் கிடந்துள்ளது. ஐயனார் சிலையில் கிடந்த நகைகளை காணவில்லை என உடனே கிராமத்தினருக்கு தகவல் சொல்ல கிராமத்தினர் கோயிலில் கூடினர்.
இந்த சம்பவம் குறித்து வடகாடு போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வடகாடு போலீசார் வந்து விசாரனை செய்தனர். தொடர்ந்து ஆலங்குடி டி.எஸ்.பி.யின் சிறப்பு தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பூசாரி அடையாளம் சொன்ன நபர் ஒரு மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன்படி மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் ஆய்வு செய்து அறந்தாங்கி வட்டம், கொடிவயல் அருகில் உள்ள மணிவிலான்வயல் கிராமத்தைச் சேர்ந்த ஆனுமுகம் மகன் மனோகரன் (வயது 31) என்பவரை போலீசார் பிடித்த போது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நபர் தான் அது என்பதை உறுதி செய்தனர். அதோடு மோட்டார் சைக்கிள் எண்ணும் சரியாக இருந்த நிலையில் மனோகரைனை அழைத்து வந்து விசாரனை செய்தனர். அப்போது, அணவயல் கோயிலுக்கு போன போது பூசாரியிடம் தேங்காய் எடுத்துவரச் சொன்னேன் அவரும் வீட்டுக்குப் போய் தேங்காய் எடுத்து வருவதற்குள் சாமி கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.
மற்ற சாமிகள் கழுத்தில் கிடந்த நகைகள் சின்னதாக இருந்தது. எல்லாவற்றையும் எடுத்தால் உடனே தெரிந்துவிடும் என்பதால் ஒரு சாமி சிலையில் இருந்ததை எடுத்தேன். அணவயலில் திருடிய நகையை சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் அடகு வைத்திருக்கிறேன் என்று சொல்ல போலீசார் குறிப்பிட்ட அந்த நகைகடைக்கு அழைத்துச் சென்று நகையை மீட்டனர். ஆனால் நகைகடைகாரர் சங்கிலியுடன் இருந்த டாலரை உருக்கி விட்டதாக கூறி வேறு டாலர் கொடுத்துள்ளார். மனோகரன் ஏற்கனவே முத்துப்பேட்டை பகுதியில் கோயிலில் நகை திருடி சிக்கியுள்ளார். மேலும் பல இடங்களில் திருடியதும் தெரிய வந்துள்ளது. கோயில் நகை திருடனை கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பிடித்து நகையை மீட்ட ஆலங்குடி டிஎஸ்பியின் தனிப்படை போலீசாரை கிராம மக்கள் பாராட்டினர்.