
கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கான பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதத்துக்கு பின்பு படிப்படியாக பொதுப்போக்குவரத்துக்கு மாநிலத்துக்குள் மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சா பொருட்கள் உட்பட பொருட்கள் மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்லவும் அனுமதியளிக்கப்பட்டது.
மாநிலங்களுக்கு இடையிலான பொதுபோக்குவரத்து மட்டும் இன்னும் பல மாநிலங்களில் ஒப்புதல் தரவில்லை. சிறப்பு ரயில்கள் மட்டும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஆந்திரா அரசாங்கம், தெலுங்கானா மாநில பேருந்துகள் ஆந்திராவின் பல நகரங்களுக்கு வந்து செல்ல அனுமதி வழங்கி உத்தரவு வழங்கியுள்ளன. அதேபோல் ஆந்திரா மாநில பேருந்துகள் தெலுங்கானா மாநிலத்துக்குள் வந்து செல்ல ஒப்புதல் வழங்கி பொதுமக்களுக்கான பொது பேருந்து போக்குவரத்து நவம்பர் 4ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதேபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில போக்குவரத்து கழகங்களுக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டு பொதுபோக்குவரத்து தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்றன. அதேபோல் ஆந்திரா மாநில போக்குவரத்து கழக பேருந்துகளும் வந்து சென்றன. ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு தினமும் 25 பேருந்துகள் சென்றுவந்துக் கொண்டிருந்தன. 100க்கும் அதிகமான அரசு பேருந்துகள் வேலூர் வழியாக சித்தூர், திருப்பதி என சென்றன. அதேபோல் திருத்தணி, திருவள்ளுவர், சென்னையில் இருந்தும் இப்படி திருப்பதி, ஆர்.கே.பேட்டை, நகிரி போன்ற நகரங்களுக்கு சென்றுவந்தன. ஆந்திரா மாநில போக்குவரத்து கழக பேருந்துகளும் வந்து சென்றன. கரோனாவால் அது தடைப்பட்டன.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மாநிலங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டன. மாநிலம் விட்டு மாநிலம் செல்ல மாநில அரசுகள் பக்கத்து மாநில அரசுகளுடன் பேசி பேருந்துகளை இயக்க தொடங்கியுள்ளன. தமிழக அரசு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா அரசுகளுடன் பேசி பொது பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.