23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா சிறப்பாக முடிந்திருக்கிறது. குடமுழுக்கு விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாட்டைச் சேர்ந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்து சிறப்பித்தது மேலும் விழாவிற்கு பெருமை சேர்த்தது.
அதில் ஒருபகுதியாக பிரான்ஸ் நாட்டில் இருந்து சுற்றுலாவாக வந்திருந்த 11 முதியவர்களில் சிலர் பெருவுடையார் கோயிலை தத்ரூபமாக வரைந்து அசத்தினர். வந்திருந்த பதினோரு பேரில் பெரும்பாலோனோர் ஓய்வு பெற்றவர்களாகவும் முதியவர்களாகவும் இருந்தனர்.
இந்த நிலையில் அனைவரும் பாண்டிச்சேரியில் ஓவியப் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் கோயில் விமானம், ராஜேந்திர வாயில், கேரளாந்தகன் வாயில், கோயிலில் உள்ள சிற்பங்கள் பொன்ற கட்டிடக் கலைகளை பார்வையிட்டு வியப்படைந்தனர். அதில் கட்டிட பொறியாளரான கிறிஸ்டின், நர்சுகளான ஜோஸ்லின், முறோ ஆகிய 3 பேரும் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.
இவர்கள் மூன்று பேரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது திறமைகளை காட்டும் விதமாக வயதான பிறகும் வாட்டர் கலரில் கோயிலை அசலாக ஓவியமாக வரைந்தனர். இது பார்ப்பவர்களை நெகிழவே செய்தது.