ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூரில் வரும் ஜனவரி 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் தேதியை மாற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பொங்கல் வரவிருக்கும் நிலையில், 'ஜல்லிக்கட்டு' நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டியில் 300 வீரர்களும், 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மேலும் போட்டி நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், காளைகளின் உரிமையாளர் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வரும் 16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. கரோனா அதிகரித்து வரும் சூழலில் 16 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை முழுமுடக்கம் என்பதால் ஜல்லிக்கட்டு தேதியை மாற்றியமைக்கலாமா என்பது குறித்துப் பேச ஜல்லிக்கட்டு விழா குழுவினருக்கு மதுரை ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.