வெளியே செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு வரும் நிலை எப்போது வருமோ என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள் ஈரோடு பகுதி பெண்கள். அந்த அளவுக்கு தாலிச் செயினை பறிக்கும் கொள்ளையர்கள் ஈரோடு மாவட்டத்தில் உலா வருகிறார்கள்.
ஈரோட்டை அடுத்த திண்டல் ராமநகரைச் சேர்ந்தவர் திலகம் (52). நேற்று மாலை வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஒரு மாவு மில்லுக்கு நடந்து சென்று இட்லி மாவை அரைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அந்தநேரம் அப்பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.
அப்போது அப்பெண் திலகத்தின் பின்னால் ஒரு பைக்கில் இரண்டு இளைஞர்கள் பின் தொடர்ந்து வந்தனர். ஒருவர் பைக்கை ஓட்டிக் கொண்டுவர பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த மற்றொரு நபர் திடீரென திலகம் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் செயினை படக்கென இழுத்து பறித்தார்.
இதனால் நிலை தடுமாறினார் அப்பெண். பின்னர் பறித்த தாலிச் செயினுடன் இருவரும் பைக்கில் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக தப்பிச் சென்றனர். இதில் தாலிச் செயினை பறிகொடுத்து அதிர்ச்சி அடைந்த திலகம் ஐயோ... திருடன்... திருடன்... என அலறி துடித்தார். ஆனால் அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால் சாலையில் யாரும் இல்லை என்பதோடு, அருகே இருந்த வீட்டிலிருந்தும் யாரும் வெளியே வரவில்லை.
நடந்த சம்பவத்தை அவர் தனது வீட்டில் வந்து கூறினார். காவல் நிலையத்தில் குடும்பத்தினர் சென்று புகார் கொடுத்தனர். இதையடுத்து வெள்ளோடு் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை சம்பவ இடத்திற்கு டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது கொள்ளை நடந்த இடத்தின் அருகில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
இந்த துணிகரமான கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், மொடக்குறிச்சி, பெருந்துறை மற்றும் ஈரோடு நகரப் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் தாலிக்கொடி பறிப்பு திருடர்கள் கைவரிசை காட்டுவது தொடர்கதையாகி விட்டது.