சுதந்திர இந்தியாவில் கட்டிடங்களையும் கஜானாவையும் கொடுத்து இணைக்கப்பட்ட புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற தொகுதிக்கான சிறப்பையும் பெற்றிருந்தது. ஆனால் ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் பாரம்பரியமிக்க புதுக்கோட்டை தொகுதியை பறித்துக் கொண்டனர். இதனால் 2009 நாடாளுமன்ற தேர்தல் முதல் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளுக்கே வாக்களித்து வருகின்றனர். எங்களுக்கு தொகுதி வேண்டும் என்று குரல் எழுப்பிய மக்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் கடந்த இரு தேர்தல்களிலும் நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில் 17 வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி, கரூர், சிவகங்கை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதில் திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் திடீரென அவருக்கு வாக்கு சேகரிக்கும் விளம்பரங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவுகிறது.
அதே போல மக்கள் நீதி மய்யம் சார்பில் கடைவீதிகள் தொடங்கி வீடு வீடாக துண்டறிக்கைகள் கொடுத்து களப்பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். தொகுதியை இழந்தாலும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
அதே வேகத்தில் தொகுதியை மீட்க போராடும் இயக்கங்கள் இந்த முறையும் நோட்டாவுக்கு வாக்கு கேட்கும் பிரச்சாரத்தை சில நாட்களில் தொடங்க உள்ளனர். இந்த முறையும் நோட்டா வாக்குகள் தான் வெற்றிகளை மாற்றி அமைக்கும் என்கிறார்கள் இளைஞர்கள்.