Skip to main content

அ.ம.மு.க.வை பதிவு செய்யத் தடை கோரிய வழக்கு!- டிடிவி தினகரனும் இந்திய தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவு!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டி.டி.வி தினகரன் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள டி.டி.வி.தினகரன், அக்கட்சியைப் பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் நிர்வாகி பெங்களூருவைச் சேர்ந்த புகழேந்தி அ.ம.மு.க. வை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ammk party registration case chennai high  court



அவர் தன் மனுவில், தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சியைப் பதிவு செய்ய அக்கட்சியின் சார்பில் 100 தனி நபர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில், தான் உட்பட மொத்தம் 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்  செய்ததாகவும், பின்னர், தினகரனின் நடவடிக்கையில் உடன்பாடின்றி, தான் உட்பட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என  பலரும் அ.ம.மு.க வில் இருந்து விலகி விட்டதால், கட்சியைப் பதிவு செய்ய அளித்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

மேலும், கட்சிக்கு உள்கட்சி விதிகளை உருவாக்காமலும், பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்காமலும், டி.டி.வி.தினகரன், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறி விட்டதாகவும், தன்னை பொதுச்செயலாளர் என பிரகடனம் செய்து கொண்டதுடன், தன் விருப்பப்படி, நிர்வாகிகளை நியமித்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். .

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக கட்சியைப் பதிவு செய்ய தினகரன் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருவதால், அ.ம.மு.க வை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரிய இந்த வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு இன்று (05.12.2019) விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்பாக டி.டி.வி தினகரன் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை வரும் 19- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்